போனசு புத்தாடை
பட்டாசு மத்தாப்பு பலகாரம்
அரைப்பவுனு தோடு அடுத்த நாள்
ஆட்டுக்கறி, கோழிக்கறி
போட்டி போட்டுக்கொண்டு
ஒளிபரப்பாகும் புதுப் படங்கள்
தின்பதையெல்லாம் சீரணிக்க
இன்னும் ரெண்டு நாள் விடுமுறை
தீபாவளியைக் கொண்டாட
எத்தனையோ காரணம் இங்கே
நரகாசுரனைக் கொன்றதாய் பொய் சொல்லி
நாடு முழுதும் பட்டாசு வெடிக்கிறோம்
ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை
என்ன நியாயம் இருக்கு
என்ன தேவை இருக்கு
இரத்தம் காயுமுன்னே
இங்கு தீபாவளி கொண்டாட
காடிழந்து வீடிழந்து கற்பிழந்து
கம்பிவேலி தாண்ட முடியாமல்
காய்ந்து போன பச்சிளம் குழந்தையை
கண்ணீர் கோடுகளோடு கையில் ஏந்தி
“நாம் வெடிக்கும் பட்டாசு நவுத்துப் போகட்டும்
உடுத்தும் புத்தாடைகள் கிழிந்து போகட்டும்
தின்னும் பலகாரம் கசந்து போகட்டுமென”
வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்
அவள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்
No comments:
Post a Comment