Sunday, October 18, 2009

letter for thirumavalavan

திருமாவுக்கு ஒரு கடிதம
அன்பின் திருமா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் ‘சில’ ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவும் வைகோவும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கத் துவங்கிய வேனிற்கால பருவம் அது.

விருப்பம் ஐம்பது சதவிகிதம் நிறைவேறியது. வென்றீர்கள், என்றாலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உலவிக் கொண்டிருந்தீர்கள். பெரிதாக வருத்தமடையவில்லை.

ஆனால் நேற்று ராஜபக்சேவுடன் குலாவிய என் இன நொண்டிச் சிங்கத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது அருவெருப்பாக இருந்தது. இது ராஜதந்திரம் என்று சொல்லி மழுப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு சொல்லி இன்னும் கொஞ்சம் அசிங்கப்பட வேண்டாம்.

நீங்கள்(குழு) எப்படி பேசினாலும் உங்களின் எந்த வேண்டுகோளும் இலங்கையில் நிறைவேற்றப்படவும் போவதில்லை; இலங்கைத் தமிழனின் வாழ்வும் மாறப்போவதில்லை என்பதை அங்கு செல்வதற்கு முன்பாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும் புன்னகைத்துக் கொண்டு விமானம் ஏறினீர்கள். என்றாலும் நம்பிக்கையில்லா தமிழர்கள் வாழ்த்துக் கூற தயங்கவில்லை.

முகாம் சந்திப்புகளை முடித்துவிட்டு அதிபரை பார்க்கப் போகும் போது உங்கள் முன்னால் இரண்டு சாத்தியங்கள் இருந்தன. ஒன்று அதிபர் குழாமிடம் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு ஒரு சாமானியத் தமிழனின் கோபத்தையும் கண்டனத்தையும் குழுவில் இருந்த நீ ஒருவனவாவது காட்டியிருக்கலாம்.சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை சந்தித்தபோது உங்கள் வீரமும் தைரியமும் செருப்போடு சேர்த்து வெளியில் நின்றுவிட்டது போலிருக்கிறது. கூனிக் குறுகி, சிரித்து வழிந்து நீங்கள் அசிங்கப்பட்டதுமில்லாமல், மொத்த தமிழினத்தையும் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.


அல்லது அதிபரை எதிர்த்து உங்களால் பேச முடியாது என்ற பயம் உங்கள் தொடையை நடுங்கச் செய்திருக்கும் பட்சத்தில் அந்த அதிபர் சந்திப்பை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் அதிபர் மாளிகையில் குலாவிக் கொண்டு திரும்பியிருக்கிறீர்கள். ராஜபக்ஷேவும் அந்த சகோதரன்களும் என்ன உங்களின் மச்சான் உறவா? அவர்கள் நீங்கள் “இறந்திருப்பீர்கள்” என்பார்கள், அதை நீங்கள் “ஜோக்”காக எடுத்துக் கொள்வீர்கள். எவ்வளவு அவமானகரமான நிகழ்வு இது.

இந்தியா வல்லரசு தேசம் என்ற கொடியேற்றுகிறீர்களே அந்த தேசத்தின் ஆளுங்கட்சி குழுவல்லவா நீங்கள். மிதித்தெறிய வேண்டியவனிடம் மண்டியிட்டு சரணாகதியடைந்த கொள்கை திருவிளக்காக நாடு திரும்பியிருக்கிறீர்கள்.

கொழும்பு செல்லும் நாடாளுமன்ற குழுவில் உங்களின் பெயரைப் பார்த்தவுடன் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ராஜபக்ஷேவின் செயல்களை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களோடு செல்லும் உங்களால் என்ன செய்துவிட முடியும் குழப்பம் இருந்தாலும், வாழ்வில் உச்சபட்ச துன்பங்களை உணர்ந்துவரும் மக்கள் வாழும் முகாமுக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. குறைந்தபட்சம் நமக்காக குரல் கொடுப்பவனை பார்த்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கலாம்.

அடுத்த நாள் அதிபர் மாளிகையில் அரங்கேறும் அசிங்கத்தை உணராமல் அவர்களும் அழுது புலம்பியிருக்கிறார்கள். வாழ்வின் அடிமட்ட கசப்போடு இலட்சக்கணக்கான மக்கள் கழிந்த பீ மூத்திரத்தின் நாற்றம் இலங்கைக்கே சென்றுமா உங்கள் நாசியில் ஏறவில்லை.

ஹிட்லர் கூட செய்யாத செயல்களைச் செய்பவன் இந்த ராஜபக்சே என்று மார்தட்டிய திருமாவை அவனது கால்களுக்கடியில் குலையும் நாய்குட்டியாக பார்கக் வேண்டி வரும் என்று நினைக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் காங்கிரஸ் கட்சியை மென்று தின்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் கொள்கைப் பிடிப்புடையவர் என்ற நம்பிக்கை இருந்ததால் தீவுத்திடலில் சோனியாவுடன் மேடையேற மாட்டீர்கள் என்றிருந்தேன். ஏறினீர்கள். கர்ஜித்தீர்கள். தேர்தலில் வென்றாக வேண்டும், நாடாளுமன்றத்தில் குரல் உயர்ந்தாக வேண்டும் என்பதால் அது தற்காலிக உடன்படிக்கை என்று நானாக சொல்லிக் கொண்டிருந்தேன்.


ஆனால் சாதாரண மூன்றாம்தர அரசியல்வாதியின் பதவி ஆசை தவிர உங்களிடம் கொள்கைபிடிப்பு என்று எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போது ஆயாசமாக இருக்கிறது. வெறும் பதவிக்காகத் தானே இத்தனை கும்பிடுகளும்.குறுகல்களும்

உங்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்று கூட இந்தக் கடிதத்தை பகிரங்கரங்கமாக பதிவு செய்து கொஞ்ச நாட்களாவது தமிழ் உணர்வோடு பேசிய உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் நினைப்பதைத்தான் சாதாரணத் தமிழன் நினைத்துக் கொண்டிருப்பான். பதவியில் இருக்கும் உங்களால் அதை உணர முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் செயலை கண்டிப்பதற்கு இந்தக் கடிதம் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, தமிழுக்காக உருவாகும் ஒவ்வொரு தலைவனும் அழிந்து வருகிறான். அல்லது அழிக்கப்படுகிறார்கள்.

யார் திட்டமிடுகிறார்கள்?

No comments:

Post a Comment