அலை மோதும் கடல் மீது
நிலைபெறும் இப் பாருலகில்
விலை போகாத் தமிழ் மானம்
தனைக் காத்த பெருமகனாய்,
சிற்பி செதுக்காத சிலையாக - எம்
சிந்தனையை சிலிர்க்க வைக்கும்
சிரித்தமுக சிறுத்தையென
சிறந்து நிற்கும் சீராளா!
பெயரினிலே மட்டுமல்ல
பெருமையிலும் பார்த்திபன் நீ!
மனோபலத்தின் மகுடமென
மாட்சி பெற்ற மாவீரா!
உடலினை நீ மெழுகாக்கி
உயிரினையே திரியாக்கி
தியாகமெனும் தீயினிலே
உருகி நீ ஒளி கொடுத்தாய்!
கருகியது கயவர்களின் முகமூடிகள்
பெருகியது தமிழுணர்வின் பெறுமானங்கள்;
நீ கொடுத்த ஒளியினிலே
உண்மையின் உரு விளங்க,
உயிர்த்தெழுந்த தமிழுணர்வால்
ஊரெலாம் கொதித்தெழும்ப,
மக்கள் புரட்சியது
மாண்புடனே வெடித்ததடா!
அகிம்சையின் எல்லையை
ஆதவன் நீ தொட்ட பின்பும்
தமிழர் தம் வாழ்விலே
கிழக்கு வெளுக்கவில்லை!
அப்போது தான் புரிந்தது......
அஸ்தமனமானது ஆதவனல்ல
அகிம்சைதான் என்று;
முப்பது அகவைகள்
முயன்று நாம் வாதாடி,
பன்னிரு நாட்கள் - நீ
பசித்திருந்து பலியாகி,
அகிம்சையின் ஆற்றலை
ஆணிவேர்வரை அலசிப்பார்த்தபின்,
ஆய்ந்தவர்கள் ஓய்ந்துவிட்டோம்
பயனில்லை; அமைதியினால் பலனில்லை;
தமிழர் தம் தலைவிதி மாற்றிட - எம்
ஈழத்தில் கிழக்கு வெளுத்திட
உழக்கு பகையினை
உயிர்ப்பலி எடுத்து,
உறு வலி உணர்த்து!
கயவர் தம் கரங்களில் எம் தமிழ் நொறுங்க,
நீர்த் தரங்கமாய் எம்மவர் உதிரமும் பெருக,
எம் நிலத்தில்...
சிரங்கென சிங்களப் பெரும்படை பரவ,
எம்மில் சிலர்...
குரங்கெனப் பகைவர் தம் பக்கம் தாவ,
நிலை குலைந்து நம் தாய்நிலம் ஆட - அன்று
தலைவன் எழுந்தான் எம்முரிமை மீட்க!
இது தவறா...........???
அகிம்சை பிழைத்தது
ஆட்சிகள் தீங்கிழைத்தது
பாரத பூமியே - எம்
பார்த்திபனைப் பலியெடுத்தது
வலித்ததெம் நெஞ்சம் - அதனால்
புலிகளாய் ஆனோம் - ஆனால்
அடுத்தவன் வயலில் நாம்
அறுவடை செய்யவில்லை - எம் பயிரைக்
கெடுக்க வந்தவனைத்
தடுக்க நாம் போரிட்டோம்!
கொடுத்தது எம் உயிர்களை - ஆனால்
எடுத்த பெயர் "பயங்கரவாதிகள்"
இது என்ன நியாயம்.......???????
அமைதி வழி நடந்தபின் தான்
ஆயுதம் தாங்கினோம் - இன்று
ஆயுதங்களை மௌனித்தது ஏன்???
செத்துப் புதைத்து
இற்றுப்போன அகிம்சையை
சமாதியிலிருந்து கிளறியெடுக்கவா...???
இல்லை! இல்லவே இல்லை!
அகிம்சை பிழைத்தது;
ஆயுதப்போரை அகிலமே சேர்ந்து நசித்தது;
அடுத்த வழியை யோசிக்க விடுமுறை வேண்டாமா?
அதுதான் ...................
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி
படைத்த தலைவனின்
பாதையில் நிற்போம்
பயணத்தின் முடிவு.....
தலவன் ஆளும் தமிழீழ தேசம்!
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்!
No comments:
Post a Comment