இலங்கையின் அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல், வருகிற ஜனவரி மாதத்தில் என்று அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே தேர்தல் வேலைகள் துவங்கிக் களை கட்டிவிட்டது, இலங்கையில் தமிழர்களைத் திறம்படவும், பேரினவாத வெறியோடும் கொன்று குவித்தது ராஜபக்சா குடும்பத்தினரா? அல்லது பொன்சேகா குழுவினரா? என்று முன்கூட்டியே அறிந்து கொள்வதில் தான் சிங்கள மக்களுக்கு இத்தனை ஆர்வம்!!! இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் வரையில் ஆட்சி புரியும் காலநீட்சி இருந்தும், சிறப்புச் சட்டம் இயற்றி வலிந்து பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை எதிர்கொள்ள இலங்கையின் மக்களும் அரசியல்வாதிகளும் ஆயத்தமாகி விட்டனர், இப்படியான ஒரு தேர்தலை எதிர்கொள்ள இலங்கையின் பொருளாதார நிலை ஆயத்தமாக இருக்கிறதோ இல்லையோ?, சிங்களப் பேரினம் எந்தக் கேள்விகளும் இன்றித் தேர்தல் திருவிழாவை வழக்கத்தை விடவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ ஆயத்தமாகி விட்டது.
இலங்கை எப்பொழுதுமே ஒரு அமைதியற்ற கலவரத் தீவாகவே இருக்க வேண்டும் என்று மண்டல வல்லரசுக் கனவு காணுகிற இந்தியாவும், பெளத்த-மதம் சார்ந்த நெருக்கம் காட்டும் சீனத்தின் இடையிலான ஆளுமைப் போட்டி ஒருபுறமாகவும், மேற்குலக முதலாளி அமெரிக்கா முன்னிலை வகிக்க, மேலும் பல வல்லாதிக்கங்கள், இலங்கை அரசியலில் முடிந்த வரை அறுவடை செய்யக் காத்துக் கிடக்கின்றன. பல்வேறு அரசியல் புறக்காரணிகளின் நடுவமாய் இலங்கை இருப்பதைக் கண்டு உண்மையிலேயே வருத்தப்படுகிற எந்த அரசியல்வாதியும் இல்லாமல் போனது தான் இலங்கை மக்கள் பெற்ற சாபம்.
“தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம்” என்று சிங்களப் பேரினம் கொக்கரித்தாலும், அந்த முற்றுப் புள்ளி இலங்கையின் எதிர்கால அரசியல் முழுவதையும் ஆட்கொள்ளப் போகிற பெருந்தீயின் சிறுதுளி என்பதைக் காலம் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருக்கிறது, காலம் அனுமதிக்கும் வரையில் உண்டு கொழிப்பது, இல்லையா? இருக்கவே இருக்கிறது அமெரிக்கக் குடியுரிமை என்றுதான் இலங்கையின் ஆளும் வர்க்கம் “சந்திரிகா” தொடங்கிக் “கோத்தபாய”, “பொன்சேகா” என்று தனது பட்டியலை விரிக்கிறது.
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் விடுதலைக்கும், மேன்மையான வாழ்விற்கும் எந்த விதத்தில் உதவப் போகிறது? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி நாம் பயணிப்பதற்கு முன்னால், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிந்து கொண்டு விடுவது நல்லது.
ஒருபுறம் ஆளும் “ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி”யின் வேட்பாளர் தற்போதைய அதிபர் “மகிந்த ராஜபக்ஷே”, இன்னொருபுறம் “ஐக்கிய தேசியக் கட்சி”யும், “ஜனதா விமுக்தி பெரமுனா”வும் இணைந்து களமிறக்கி இருக்கும் “சரத் பொன்சேகா” எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர். இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி என்பது உறுதியாகி விட்ட நிலையில் மூன்றாவது வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர், “இடது முன்னணி”யின் “டாக்டர்.கருணாரத்ன விக்கிரமபாகு”, இம்மூவரையும் தவிர்த்து பெயரளவில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த முதல் இரண்டு வேட்பாளர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்கும் உருவாகி இருப்பது ஏறத்தாழ தங்கள் உரிமைகளுக்கான இறுதிச் சடங்கை அவர்களே நடத்திக் கொள்வது போல இருப்பினும், இடையில் இருக்கும் ஒரு வாய்ப்பு நம்பிக்கை தருவதாக இருக்கிறது, அந்த வாய்ப்பு “இடது முன்னணி”யின் “டாக்டர்.கருணாரத்ன விக்கிரமபாகு” அவர்களை ஆதரித்து வாக்களிப்பதேயாகும், இவருக்கு ஏன் தமிழ் பேசும் மக்கள் ஆதரவு தர வேண்டும்? என்று அறிந்து கொள்வதற்கு முன்னர் முதலிரண்டு வேட்பாளர்களுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மட்டுமில்லை, ஒரே உறையிலிருக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான கூர்வாட்கள். “தமிழர் நலன்”, “தமிழர் விடுதலை” போன்ற சொல்லாடல்களையே வருங்காலத்தில் நசுக்கிப் போடக் காத்திருக்கும் நச்சுப் பாம்புகளில் எது நல்ல பாம்பு? என்பது போன்ற போட்டிதான் இவர்கள் இருவரின் போட்டியும். கடந்த ஆறு தேர்தல்களில் இலங்கையின் வேட்பாளர்கள் அனைவரும் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த “தமிழ் மக்களின் உரிமைகள்” என்ற முன்வடிவைத் தகர்த்ததில் இவர்கள் இருவருக்கும் சரிபங்கு உண்டு. இது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தின், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான போட்டியாகவே “ராஜபக்ஷே VS பொன்சேகா” போட்டியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் தேர்தல் என்கிற களத்தைத் தங்கள் தனி அடையாளங்களோடும், தன்மானத்துடனும் எதிர் கொள்ள இயலாதவாறு முடக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள், இவர்களில் பலர் வாக்களிக்கப் போவதில்லை என்றாலும் எஞ்சிய தமிழ் மக்களின் வாக்குரிமை முழுமையான ஒரு தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்க வேண்டுமேயானால் இம்முறை வாக்குகள் சிதறி விடக்கூடாது, மேலும் வாக்குகளைச் சிதறடிக்கும் பல்வேறு காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதில் அரசியல் முகவர்களும், மக்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இலங்கையின் அரசியலில் கலந்து ஐக்கியமாகி விடுவதற்கு சொல்லப்படுகிற வழிமுறை அல்ல இது, மாறாக ஒருங்கிணைந்து தேசிய விடுதலை என்கிற கனவினை அதற்கான முகாந்திரத்தை அரசியல் ரீதியாக உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு ஒப்பானதாகும்.
இன்றைய இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு இசைவாகவே இயங்கி வருகிறது, “ராஜபக்ஷே அண்டு கம்பெனி” குலை நடுங்கிப் போய்க் கிடக்கிறது, காரணம் வளர்த்த கிடாவின் எதிர்ப் பாய்ச்சல், தேர்தல் வெற்றிக்காக எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ? “பொன்சேகா” என்று “ராஜபக்ஷே” குடும்பத்தினர் உள்ளூர அச்சம் கொள்வதோடு, இது அரசியல் வழியாகவும் தங்களின் இருப்பிற்கான கடைசிப் போர் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள், மேலும் இந்திய பார்ப்பன-பனியாக் கூட்டத்தின் எதிர்ப்பையும் தங்கள் பக்கமாக அவர்களே திருப்பிக் கொண்டிருக்கிறார்கள், இதற்குக் காரணம் ராஜபக்ஷேவின் சீன – பெளத்த இணக்கம், சீனம் உதவிக் கரம் நீட்டுகின்ற ஒரு மண்டல வல்லாதிக்கம் என்பதையும் தாண்டி உலகப் பொருளாதாரச் சூழலில் அமெரிக்க அடியாளின் மாற்றாக முன்னிறுத்தப் படுவதும் ஒரு காரணம், உளவியல் ரீதியாக சிங்களம் சீனத்தோடு இயற்கையாகவே இணங்கி இருக்கிறது, மத வழிபாட்டு ரீதியாகவும், பொருளாதார கையகப்படுத்தல் வழியாகவும் சிங்களம் சீனத்தோடு கொஞ்சிக் குலாவுவது இந்தியப் பார்ப்பன – பனியாக் கூட்டத்தின் வெறுப்புக்கான முதல் காரணி, பாதுகாப்பு ரீதியில் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த தெற்குப் பகுதியும் இனி தலை வலியாக மாறி விடுமோ? என்று அச்சம் கொள்கிறது இந்திய பனியாக் கூட்டம்.
மேற்குலக நெருக்கடிகளுக்கும், போர்க்குற்றம் என்கிற பூச்சாண்டிக்கும், பயம் கொள்வது போல ராஜபக்ஷே குடும்பத்தினர் இந்திய முதுகில் ஏறிக் கொண்டு மேற்குலகை எதிர்கொள்ளவும், அதே மேற்குலகின் கருவியாக இந்தத் தேர்தலில் பொன்சேகா பயன்படுத்தப்படுவதும் வழக்கமான இலங்கை ஆளும் வர்க்கத்தின் வித்தை தானேயன்றி ஒருபோதும் உண்மையான நட்பு இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. ராஜபக்ஷேவின் வித்தைகளையாவது “தனது இனத்திற்கு உண்மையாக” இருக்கும் வித்தை என்று கணக்கில் கொண்டாலும், பொன்சேகாவை ஒருபோதும் தமிழ் மக்களாலும், சிறுபான்மை இன மக்களாலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனெனில் இன்றைக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளை வேண்டி விரும்பும் பொன்சேகா கடந்த ஆண்டில் இப்படிக் கொக்கரித்தார், " இது சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு, இங்கே சிறுபான்மையினர் எல்லாம் உரிமை கொண்டாட இயலாது" நேரடியாகவே ஒரு பேரின வெறிகொண்ட பொன்சேகாவும், அதற்கு ஆணையிட்டு அள்ளி வழங்கிய ராஜபக்ஷேவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே அன்றி வேறொன்றுமில்லை. போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், பேரினவாத அடக்குமுறையின் போர் வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடவுமாய் தேர்தலை எதிர்கொள்ளும் இவ்விருவரையும் தமிழ் மக்களும் சரி, ஏனைய சிறுபான்மை மக்களும் சரி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் கூடாது.
இந்த நிலையில் அண்மைக்கால இலங்கை அரசியலின் அணுகுமுறையை சில பொதுவான அலகுகளால் இனம் காண முடியும், பேரினவாத அடக்குமுறை அலகுதான் அது, இந்த அலகில் இருந்து சில நேரங்களில் மாறுபட்டுப் பயணிக்கும் ஒரு வேட்பாளர் தான் “டாக்டர்.குணரத்ன விக்கிரமபாகு”, இவரது அரசியல் செயல்பாடுகள் பெரிய வேறுபாட்டு அளவீடுகள் இல்லாதிருப்பினும், அடிப்படை மாற்றங்களை உள்ளடக்கி இருப்பதே இதற்குக் காரணம், போர் தீவிரமடைந்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டி “சிறுபான்மையினருக்கு எதிரான போரை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தன்னுரிமை மிக்க அரசியல் தீர்வுகளை நோக்கி இலங்கை அரசு நகர வேண்டுமே தவிர போரின் வழியாக நகர்தல் தவறானது" என்கிற அடிப்படை மனித நேயம் மிகுந்த குரலை பாராளுமன்றம் வரையில் கொண்டு சென்றவர் தான் இந்த வேட்பாளர்.
இவை தவிர்த்து இந்த வேட்பாளரைத் தமிழ் மக்களும் சிறுபான்மையினரும் தேர்வு செய்து வாக்களிப்பதற்கு நிறையக் காரணிகள் இருக்கின்றன, அவற்றில் இன்றியமையாத முதல் காரணி. “தமிழ் மக்களின் தன்னாட்சிக் குரலை நெரிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் இருமுனைகளில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, மீண்டும் ஒரு அரசியல் வழியான நெருக்கடியை, அழுத்தத்தை பேரினவாதத்தின் மீது திணிப்பது”, மேலும், குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை இந்த வேட்பாளருக்கு வழங்குவதன் மூலம் “முண்ணனியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்களும் 50 % திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற இயலாத வண்ணம் முட்டுக்கட்டை இடுவது”. இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக எவரும் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற இயலாது என்கிற செய்தியை சிங்களப் பேரினத்திற்கு நம்மால் உரக்கச் சொல்ல முடியும்.
இந்த நகர்வு ஒன்று தான், தமிழ் மக்களின் விடியலுக்குக் காலம் வழங்கி இருக்கும் தன்மானம் நிறைந்த ஒரே வாய்ப்பு, இந்த வாய்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும், வகையில் முழுமையான பரப்புரைகளையும், திட்ட முன்வடிவுகளையும் புலத்தில் இயங்கும் அரசியல் தலைவர்களோடு இணைந்து (ஒட்டுண்ணிகள் மற்றும் பல்லக்குத் தூக்கிகளைத் தவிர்த்து) புலம் பெயர்ந்த மக்களும், தாய்த்தமிழ் நாட்டு ஊடகங்களும் சரியாகச் செய்ய வேண்டிய தருணம் இது, விடுதலையை நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டமாக, இதனை கருத்தில் கொண்டு தேர்தலை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்வது காலத்தின் தேவை. “தேர்தலைப் புறக்கணிப்பது, வாக்குகளைச் சிதறடிப்பது போன்ற செயல்கள் விடுதலைக் கனவை நாமே அழித்துக் கொள்வது போல அறியாமை மிகுந்தது மட்டுமன்றி, வரலாற்றில் மீள முடியாத முடக்கத்தைக் கொடுப்பதும் ஆகி விடும்”. இதனை உணர்ந்து இந்த வரலாற்றுப் பயணத்தில் நமது அரசியல் புரிந்துணர்வை நமது மக்கள் வெளிப்படுத்துவார்களா?? என்கிற கேள்விக்குப் பின்னர் ஒளிந்து கிடக்கிறது தமிழர்களின் தாகமான, தமிழீழத் தாயகம்.-கை.அறிவழகன்